புதின் உதவியாளர் மகளின் கொலையில் தொடர்பா? உக்ரைன் விளக்கம்

உக்ரைன் டார்யா டுகினா கொலையில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-08-23 17:03 GMT

ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர் அலெக்சாண்டர் டுகின். இவரது 30 வயது மகள் டார்யா டுகினா. பத்திரிகையாளரான டார்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மாஸ்கோ அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் குண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உக்ரைன் மீதான ரஷிய போரை தீவிரமாக ஆதரித்து வரும் அலெக்சாண்டர் டுகினை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் அவரது மகள் டார்யா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கார் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் ரஷிய புலனாய்வு குழு டார்யா டுகினாவின் படுகொலையின் பின்னணியில் உக்ரைன் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவர் மாஸ்கோவில் டார்யா டுகினாவின் வீட்டுக்கு அருகில் குடியேறி பல நாட்கள் திட்டம் தீட்டி இந்த படுகொலையை அரங்கேற்றியதாக ரஷிய புலனாய்வு குழு கூறியது.

இந்த நிலையில் ரஷியாவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள உக்ரைன் டார்யா டுகினா கொலையில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் கூறுகையில், "ரஷியாவில் நடந்த குண்டு வெடிப்புக்கும், உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு இன்னும் முக்கியமான பணிகள் உள்ளன. அதில்தான் எங்கள் கவனம் உள்ளது. ரஷியா கற்பனை உலகில் வாழ்கிறது. இந்த குண்டு வெடிப்பு உள்நாட்டு மோதலின் விளைவு" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்