#லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு

ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-03 21:34 GMT

Image Courtacy: AFP



Live Updates
2022-06-04 14:51 GMT

ரஷியா உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்பாக ராணுவ மட்டத்தில் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்று உக்ரைன் நினைப்பதாக உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரகமியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ புதிய ஆயுதங்களை பயன்படுத்த எங்களின் ஆயுதப்படைகள் தயராக உள்ளன.எனினும் வலுவான நிலையில் இருக்கும் போது அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார். இதனிடையே, லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் நகரத்தை ரஷியாவிடம் இருந்து மீட்டு விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2022-06-04 12:06 GMT

தொழில்துறை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை கைப்பற்ற தன்னிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ரஷியா பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

"சண்டை தற்போது செவரோடோனெட்ஸ்கில் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. எங்களுக்குத் தெரிந்த வரையில், ரஷிய இராணுவம் அதன் அனைத்து சக்திகளையும், அந்த பகுதியில் பயன்படுத்துகிறது" என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய நகரமாக செவெரோடோனெட்ஸ்க் உள்ளது. சமீபத்திய வாரங்களில் ரஷியப் படைகள் அந்தப் பகுதிகளில் முன்னேறி வருகின்றன. முதல்கட்டத் தகவல்களின்படி, நகரத்தின் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றிவிட்டதாகவும், இதையடுத்து உக்ரைன் இராணுவம் அவர்களை நோக்கி முன்னேறுவதாகவும் அவர் கூறினார். 

2022-06-04 00:30 GMT


உக்ரைனுக்கு தொடர்ந்து எங்கள் ஆதரவை வழங்குவோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த 100 நாட்களாக ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து உக்ரேனிய மக்களுக்கு தங்கள் நாட்டின் ஆதரவு தொடர்ந்து வருவதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ரஷியாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிரான உக்ரேனிய எதிர்ப்பின் 100வது நாள் இன்று. உக்ரைன் மக்களுக்கான எங்கள் ஆதரவு இந்த நேரத்தில் உறுதியாக உள்ளது. - அது ஒருபோதும் மாறாது. நாங்கள் தொடர்ந்து உதவிகளை வழங்குவோம், மேலும் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையானவற்றை வைத்திருப்பதை உறுதி செய்வோம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். 

2022-06-04 00:06 GMT


ஐ.நா. விசாரணை

கிழக்கு உக்ரைனில் சிறிதளவு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களில் ஒன்றான லைசிசான்ஸ்க் நகரில் 60 சதவீத உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ரஷிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் அரங்கேறி இருப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் 3 மனித உரிமைகள் நிபுணர்களை விசாரணைக்காக அங்கு அனுப்புகிறது. அந்த குழு, லிவிவ், கீவ், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களுக்கு 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சென்று விசாரணை நடத்த உள்ளது என ஐ.நா. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022-06-03 22:53 GMT


ரஷியா தாக்குதல் பலமானவை

உக்ரைனில் நடந்துள்ள போர்க்குற்றங்களுக்கு ரஷியாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன.

உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.

இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, கிழக்கு டான்பாஸ் பகுதியில் சண்டை கொடூரமாக நடக்கிறது. செவிரோடொனெட்ஸ் நகரைப்பிடிப்பதற்கு ரஷிய படைகள் நடத்தி வருகிற தாக்குதலில் சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பல நகரங்களில் ரஷியாவின் தாக்குதல்கள் பலமாக உள்ளது என குறிப்பிட்டார்.

அதேநேரத்தில் உக்ரைன் படைகளின் எதிர்ப்பை அவர் பாராட்டினார். வெற்றி நமதாக இருக்கும் என்றும் அவர் சூளுரைத்தார்.

ஆனால் ரஷிய அதிபர் மாளிகை கூறுகையில், “ரஷியா முன்னேற்றங்களை கண்டுள்ளது. தனது நோக்கங்களை அடையாமல் ரஷியா விட்டு விடாது” என குறிப்பிட்டது.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் 5 தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் குறிப்பிடுகையில், “ரஷியா இப்போது சாதித்து வருகிறது. அது தந்திர உபாய வெற்றி, ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் தனது வளங்களை அது விலையாகக் கொடுத்துள்ளது” என தெரிவித்தது.

2022-06-03 22:26 GMT


ரஷிய கச்சா எண்ணெய்க்கு தடை

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தடைகள் தொடர்கின்றன. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்தது.

இதன்படி ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்பட்டு 6 மாதங்களில் முடிவுக்கு வந்து விடும். சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதும் 8 மாதத்தில் முடிவுக்கு வரும்.

2022-06-03 21:35 GMT


ரூ.45 லட்சம் கோடி இழப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நேற்றுடன் 100 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் போர் ஓய்ந்த பாடில்லை. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளன.

இப்படி உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்த நாட்டின் மந்திரிசபை மதிப்பிட்டுள்ளது. 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உக்ரைன் மந்திரிசபை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்