இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் முந்துகிறார், ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முந்துகிறார். அவர் 104 எம்.பி.க்கள் ஆதரவைத் திரட்டி உள்ளார்.

Update: 2022-10-22 16:51 GMT

பிரதமர் பதவி போட்டி

இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நெருக்கடி, பிரதமர் லிஸ் டிரஸ் பதவிக்கு வேட்டு வைத்து விட்டது. அவர் தனது ராஜினாமாவை 20-ந் தேதி அதிரடியாக அறிவித்து, அந்த நாட்டின் அரசியல் களத்தை பரபரக்க வைத்து விட்டார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை(பிரதமர்) அதிவேகமாக தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 100 எம்.பி.க்கள் ஆதரவை பெற்றால், 3 பேர் முதல் கட்ட போட்டியில் இருக்க முடியும். ஆனால் ஒருவர் 158 எம்.பி.க்கள் ஆதரவைப் பெற்றால், 2 பேர் மட்டுமே களத்தில் இருக்க இயலும். ஆனால் ஒருவரே மிக அதிக எண்ணிக்கையிலான (200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள்) ஆதரவைப் பெற்றுவிட்டால், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது நாளை (திங்கட்கிழமை) மாலையே தெரிய வந்து விடும்.

ஆனால் 2 பேர் போட்டியிடுகிற நிலை வந்தால் இணையவழி ஓட்டுப்பதிவு நடைபெறும் இதன் முடிவு 28-ந் தேதி வெள்ளிக்கிழமை தெரிய வரும்.

களத்தில் 3 பேர்

இந்தநிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் களத்தில் பெண் தலைவரான பென்னி மார்டண்ட் இறங்கி பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் (47 வயது), முன்னாள் நிதி மந்திரியான இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கும் (42 வயதான இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன்) இன்னும் அதிகாரபூர்வமாக களத்தில் குதிக்காவிட்டாலும், அவர்கள் எம்.பி.க்கள் ஆதரவைப் பெறுவதில் தீவிரம் காட்டுகின்றனர்.

ரிஷி சுனக் நேற்றே 104 எம்.பி.க்களின் ஆதரவை பெற்று விட்டார். அவருக்கு மற்றொரு முன்னாள் நிதி மந்திரியான சாஜித் ஜாவித், பாதுகாப்பு மந்திரி டாம் டுகன்தாட், முன்னாள் துணைப்பிரதமர் டொமினிக் ராப் உள்ளிட்டோர் ஆதரவு கிடைத்துள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு நேற்று வரை 47 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது. விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தவர், லண்டன் திரும்பி எம்.பி.க்கள் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு இந்திய வம்சாவளியான முன்னாள் உள்துறை மந்திரி பிரிதி பட்டேல், வர்த்தக மந்திரி ஜேக்கப் ரீஸ், போக்குவரத்து மந்திரி ஆனி மேரி டிரிவெல்யான் ஆதரவு கிடைத்துள்ளது.

பென்னி மார்டண்டுக்கு 21 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

முந்துகிறார் ரிஷி சுனக்

ரிஷி சுனக்குக்கு ஆதரவு அளித்துள்ள முன்னாள் துணைப்பிரதமர் டொமினிக் ராப் கூறுகையில், " ரிஷியிடம் சரியான திட்டம் இருக்கிறது. அவர் நாட்டின் பொருளாதார நிலைக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிற சிறந்த வேட்பாளராக இருப்பார். அவர் பல லட்சம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை அளிப்பார்" என தெரிவித்தார்.

எனவே லிஸ் டிரசுடன் கடந்த முறை போட்டியில் இருந்து வெற்றிவாய்ப்பை இழந்த ரிஷி சுனக், சென்ற முறை விட்டதை இந்த முறை பிடிப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

தற்போது 104 எம்.பி.க்கள் ஆதரவைப் பெற்று விட்ட நிலையில், பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக்தான் முந்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்