நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை; பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு
நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்ட் கோரிக்கைக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆம்ஸ்டர்டாம்,
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை மந்திரி யோவாவ் காலண்ட், ஹமாஸ் தலைவர்கள் யெஹ்யா சின்வார், முகமது தெயிப் மற்றும் இஸ்மாயில் ஹானியே ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கையை யூத விரோதம் என்று விமர்சித்துள்ளனர். அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் எந்த சூழலிலும் தண்டனை பெறாதவர்களுக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் மதிக்கிறது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல் பெல்ஜியம் வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லாபிப் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குற்றவாளிகள் யாராக இருந்தாலும், காசாவில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவர்கள் மீது உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.