ராமரும், சீதையும் இந்தியா-நேபாளம் இடையிலான கலாசார இணைப்பின் அடையாளம் - நேபாள மந்திரி

ராமர் கோவில் திறப்பு விழா, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு பெருமையான தருணமாகும் என நேபாள மந்திரி என்.பி.சவூத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-23 04:28 GMT

காத்மாண்டு,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேபாள நாட்டில் உள்ள சீதை பிறந்த இடமாக நம்பப்படும் ஜானக்பூரில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசுப்பொருட்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவையொட்டி நேபாளத்தில் உள்ள கோவில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ராமரும், சீதையும் இந்தியா-நேபாளம் இடையிலான கலாசார இணைப்பின் அடையாளம் என நேபாளத்தின் வெளியுறவுத்துறை மந்திரி என்.பி.சவூத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெய் ஸ்ரீ ராம்! பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் பிரதிஷ்டை விழா, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் பெருமையான தருணமாகும்.

ராமரும், நேபாளத்தின் மகள் சீதையும் தைரியம், தியாகம் மற்றும் நீதியின் உருவகங்கள். அவர்கள் நேபாளத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான கலாசார மற்றும் நாகரீக இணைப்பை அடையாளப்படுத்துகிறார்கள். அவர்களின் நற்பண்புகளும், லட்சியங்களும் நம்மை மனித குல சேவைக்கு தொடர்ந்து வழிநடத்தட்டும்!" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்