ராணி எலிசபெத்தின் 8 பேரக்குழந்தைகள் சவப்பெட்டியை சுற்றி நின்று மரியாதை செய்த காட்சி..!

ராணி எலிசபெத்தின் பேரக்குழந்தைகள் அனைவரும் அவரது சவப்பெட்டியை சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-09-18 05:23 GMT

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். ராணி எலிசபெத்தின் பேரக்குழந்தைகள் அனைவரும் மேடையில் அவரது சவப்பெட்டியை சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.

மன்னர் சார்லஸின் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி(இளவரசர்கள்), இளவரசி அன்னேவின் குழந்தைகளான ஜாரா டிண்டால் மற்றும் பீட்டர் பிலிப்ஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜெனி, இளவரசர் எட்வர்ட் லேடி லூயிஸ் விண்ட்சர் மற்றும் ஜேம்ஸின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

வேல்ஸ் இளவரசர் மற்றும் சசெக்ஸ் பிரபு உட்பட ராணியின் எட்டு பேரக்குழந்தைகள் அவரது சவப்பெட்டியைச் சுற்றி நின்று அஞ்சலி செலுத்திய காட்சிகள் அரச குடும்பத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சிம்மாசனத்தின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியம் தலை குனிந்து, ராணியின் சவப்பெட்டியின் தலை அருகிலும், அவரது சகோதரர் இளவரசர் ஹாரி காலடியிலும் நின்றனர். அரச பரம்பரையின் ராணுவ வீரர்களான இளவரசர்கள் இருவரும் பாரம்பரிய ராணுவ சீருடையில் இருந்தனர். இளவரசர் ஹாரி ஏற்கெனவே பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றியவர் ஆவார்.

ராணியை இறுதியாகப் பார்க்க எல்லா வயதினரும் எல்லாத் தரப்பிலிருந்தும் வந்திருக்கிறார்கள். நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்கள், கிட்டத்தட்ட 16 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.

நேற்றிரவு லண்டனில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததால், தன்னார்வலர்கள் பலர் வரிசையில் காத்துக்கிடக்கும் பொதுமக்களுக்கு போர்வைகள் மற்றும் தேநீர் கோப்பைகளை வழங்கினர்.

இந்நிலையில், ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களிடம், மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் பொதுமக்கள் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினர். அதனை ஏற்று கொண்ட இருவரும் கைகளை குலுக்கி, நன்றி தெரிவித்து கலந்துரையாடினர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று ராணியின் நான்கு குழந்தைகள் - சார்லஸ், அன்னே, ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் - ஆகியோர் அவரது சவப்பெட்டி அருகில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

நாளை(திங்கட்கிழமை) அதிகாலை வரை ராணியின் உடல் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர், ராணியின் சவப்பெட்டி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கிற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்