3-ம் உலகப் போர்: நவீன உலகில் எதுவும் சாத்தியமே - புதின்

சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னியை விடுதலை செய்யவே விரும்பினேன் என புதின் கூறினார்.

Update: 2024-03-18 05:25 GMT

மாஸ்கோ,

ரஷியாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். இந்நிலையில் ரஷியாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தேர்தலில், தற்போதைய அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. முதன்முறையாக ரஷிய வரலாற்றில் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடந்தது.

உக்ரைன் போருக்கு மத்தியில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதன்படி தற்போதைய தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ரஷிய வரலாற்றில் ஸ்டாலினுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி என்ற சாதனையை புதின் படைத்துள்ளார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு சாதனையை புதின் செய்துள்ளார்.

தேர்தலில் மெகா வெற்றியை பெற்றதை தொடர்ந்து புதின் ஆற்றிய முதல் உரையில்,

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷியாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே.

உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வது நல்லது.

சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னியை நான் விடுதலை செய்யவே விரும்பினேன். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேற்கத்திய நாடுகளின் சில சிறைகளில் இருக்கும் ரஷியக் கைதிகளுக்கு மாற்றாக நவால்னியை விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அவரது மறைவு எதிர்பாராதது. ஆனால் அதை சிலர் விமர்சிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது மிகப்பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிலவுகிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷிய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைச்சுவையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்