உக்ரைனில் நீளும் போர்... பட்டினியை ஒழிக்கும் சர்வதேச முயற்சியை தடம் புரள செய்யும்: ஐ.நா.வில் இந்தியா பேச்சு
உக்ரைனின் தீர்க்கப்படாத நெருக்கடி, பட்டினியை ஒழிக்கும் சர்வதேச அளவிலான முயற்சியை தடம் புரள செய்யும் என ஐ.நா.வில் இந்தியா கூறியுள்ளது.
நியூயார்க்,
சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் முதன்மை செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை, குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனால், எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதனுடன், சர்வதேச அளவில் தளவாட பொருட்களை வினியோகம் செய்யும் கட்டமைப்பில் இடையூறு விளைவித்து உள்ளது என கூறியுள்ளார்.
வருகிற 2030ம் ஆண்டிற்குள் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுதல் மற்றும் பட்டினியை ஒழிப்பது என்று தென்பகுதியிலுள்ள சர்வதேச நாடுகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் அர்த்தமுள்ள வழியை ஏற்படுத்தவில்லை எனில், மோதல்களால் சர்வதேச பொருளாதாரத்தில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும். அதனால், மேற்கூறிய சர்வதேச முயற்சிகள் தடம்புரள வழிவகுக்கும் என துபே தெரிவித்து உள்ளார்.
இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன்கள் அளவிலான கோதுமை, அரிசி, தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகியவற்றை உணவு சார்ந்த உதவி என்ற வடிவில், நமது அண்டை நாடு மற்றும் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா வழங்கி உள்ளது என துபே கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று மற்றும் போர் உள்ளிட்ட மோதல்களுக்கு மத்தியில் தனது நட்பு நாடுகளுக்கு இந்தியா செய்துள்ள உதவிகளின் பதிவுகளையும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.