பாலஸ்தீன கொடியை தொங்கவிட்ட போராட்டக்குழுவினர்... பைடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு
விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி அமெரிக்காவில் உள்ள சக செய்தியாளர்களுக்கு பாலஸ்தீன செய்தியாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சி வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன், கிரிஸ் பைன், மோலி ரிங்வால்ட் மற்றும் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி பாலஸ்தீன செய்தியாளர்கள், அமெரிக்காவில் உள்ள சக செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். விருந்து நடைபெறும் ஓட்டலுக்கு வெளியே பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அதிபர் ஜோ பைடன் வரும்போது அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் ஓட்டலின் மேல் தளத்திற்கு சென்று, அங்குள்ள ஜன்னலில் இருந்து மிகப்பெரிய பாலஸ்தீன கொடியை தொங்கவிட்டனர். மற்றவர்கள் கீழே சாலையில் திரண்டு, பதாகைகளை ஏந்தியபடி, கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
1920-ம் ஆண்டு முதல் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் சிறந்த செய்தியாளர்களை கவுரவிப்பதுடன், செய்தியாளர்களுக்கான உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த நிகழ்வில் 2,600 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.