செர்பியாவில் முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 'அடையாளம் தெரியாத' ராணுவ வீரரின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை

அவாலா மலைப்பகுதியில் உள்ள நினைவிடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

Update: 2023-06-08 19:50 GMT

பெல்கிரேடு,

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, சூரிநாமில் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான அவரது சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் செர்பியாவுக்கு சென்றார்.

செர்பியாவின் காந்திஜீவா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இன்றைய தினம் செர்பியாவின் பிரதமர் அனா பிரனாபிக், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச் ஆகியோரை திரவுபதி முர்மு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் இருதரப்பு உறவின் முக்கிய நோக்கங்களை பற்றி விவாதித்தனர்.

இதனையடுத்து பெல்கிரேடு நகரத்தின் தென் கிழக்கில் அவாலா மலைப்பகுதியில் அமைந்துள்ள 'அடையாளம் தெரியாத' ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். இந்த அடையாளம் தெரியாத வீரர், முதலாம் உலகப்போரில் உயிரிழந்துள்ளார். அவரது பெயர், படைப்பிரிவு உள்ளிட்ட எந்த விவரங்களும் கிடைக்காத நிலையில், அவர் உயிரிழந்த இடத்திலேயே அவரை புதைத்துள்ளனர்.

பின்னர் 1938-ம் ஆண்டு அப்போதைய மன்னர் அலெக்ஸாண்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில், முதலாம் உலகப்போர் மற்றும் பால்கன் போர்களில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக அதே இடத்தில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டது. தற்போது செர்பியாவிற்குச் சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, அவாலா மலைப்பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத வீரரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்