அரசு முறைப் பயணமாக சூரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
பராமரிபோ விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;
பராமரிபோ,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சூரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரபா குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூரினாம், செர்பியா நாடுகளுக்கு செல்கிறார் எனவும், இப்பயணத்தின் போது சூரினாம் மற்றும் செர்பியா நாடுகளின் அதிபர்களை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலமாக சூரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சூரினாம் நாட்டின் ஜனாதிபதி சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை சந்தித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.