போர் நிறுத்தத்திற்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு

காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-05-06 18:13 GMT

காசா,

காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஏறக்குறைய 7 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த 7 மாத கால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன. இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இன்று ஏற்று கொண்டுள்ளது. போர்நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்து உள்ளது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், சமீப நாட்களாக எகிப்து மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அதிகாரிகள் கூறும்போது, அடுத்தடுத்த கட்டங்களாக போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இஸ்ரேல் படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ளது. அவை நிறைவேற்றப்படுவது பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, தொலைபேசி வழியே கத்தார் பிரதமர் மற்றும் எகிப்து நுண்ணறிவு மந்திரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த அறிவிப்பால் பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் இஸ்ரேல் தாக்குதல் தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களிடையே காணப்படுகிறது.

எனினும், இஸ்ரேல் இன்னும் இதற்கு உடன்படாத சூழலே காணப்படுகிறது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி இஸ்ரேல் தரப்பில் இருந்து உடனடியாக எந்தவித பதிலும் வெளிவரவில்லை. தொடர்ந்து காசாவில் உள்ள ரபா நகர் மீது தரைவழி படையெடுப்பை தீவிரப்படுத்தும் முடிவில் இஸ்ரேல் அரசு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்