ரஷிய போருக்கு பின், உக்ரைன் அதிபருடன் முதன்முறையாக பிரதமர் மோடி நேரில் சந்திப்பு

ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

Update: 2023-05-20 11:02 GMT

டோக்கியோ,

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாடு மே 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. உறுப்பினர் நாடு அல்லாதபோதும், ஜப்பானின் அழைப்பையேற்று பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்று உள்ளார்.

இதேபோன்று இந்த உச்சி மாநாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் ஜப்பான் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, அவர் இன்று ஹிரோஷிமா நகருக்கு சென்று சேர்ந்து உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், தனது நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்சுடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரான்சு நாட்டு அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும், பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட புகைப்படத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இடம் பெற்று உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, உலகில் உக்ரைன் போர் மிக பெரிய ஒரு விசயம். இதனை பொருளாதாரம், அரசியல் சார்ந்த ஒரு விவகாரம் என்றளவில் மட்டும் நான் பார்க்கவில்லை. இது மனிதஇனத்திற்கான விவகாரம். போருக்கான தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவும், நானும் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என அப்போது கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இது முதன்முறையாகும். ரஷிய அதிபர் புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பலமுறை தொலைபேசி வழியே பேசியிருக்கிறார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல என கடந்த ஆண்டு செப்டம்பரில் பேசும்போது பிரதமர் மோடி ரஷியாவை லேசாக தாக்கும் வகையில் குறிப்பிட்டார். இந்த போருக்கு, தூதரக அளவிலும் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசும் கூறியிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்