இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை- மாலத்தீவு மந்திரி

கடல் சார்ந்த பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு டோர்னியர் ரக போர் விமானத்தை மாலத்தீவுக்கு இந்தியா பரிசாக அளித்து இருந்தது.

Update: 2024-05-13 07:41 GMT

மாலே,

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறது மாலத்தீவு.

இதனிடையே, தங்கள் நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு உத்தரவிட்டது. இதன்படி, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய  விமானத்தை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை' என அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி காசன் மவுமூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: - மாலத்தீவை சேர்ந்த சில வீரர்கள் இந்திய விமானத்தை இயக்கும் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், அவர்கள் பயிற்சியில் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் நமது வீரர்களால் அதை முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய விமானங்களை இயக்கும் உரிமம் மாலத்தீவு ராணுவத்தில் யாருக்கும் இல்லை" என்றார்.

கடல் சார்ந்த பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ரக போர் விமானத்தை மாலத்தீவுக்கு இந்தியா பரிசாக அளித்து இருந்தது. மாலத்தீவில் முகாமிட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள், போர் விமானத்தை இயக்கும் பயிற்சியை  மாலத்தீவு வீரர்களுக்கு அளித்து வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்