பிஎப்.7 ரக கொரோனா பரவல்: சீன விமான தடையை வலியுறுத்தும் 10-ல் 7 இந்தியர்கள்

சீனாவில் பிஎப்.7 ரக கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் அந்நாட்டு விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென 10-ல் 7 இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-12-21 11:48 GMT



புதுடெல்லி,


சீனாவில் உகான் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019 டிசம்பரில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனினும், அதற்கு முன்பே ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளின் கழிவு நீரில் கொரோனா மாதிரிகள் இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.

சீனாவில் முதலில் தொற்று அறியப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளால் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது உலக நாடுகளை அச்சரியத்தில் தள்ளியது. இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், சீனாவில் சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் எதிரொலியாக கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குளிர்காலம் தொடங்கியுள்ள சூழலில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத சீனர்களும், உலக அளவில் 10 சதவீதத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடும் என்றும் மக்களில்லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் சர்வதேச தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் கொரோனாவின் உருமாறிய வகையான பி.எப்-7 என்ற வைரசானது பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. சீனாவின் இந்த பாதிப்பு வைரசின் புதிய பிறழ்வுகளை உருவாக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா தொற்று மீண்டும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனை முன்னிட்டு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசும் மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது.

இதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பு மற்றும் தொற்றை கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்கவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் அரசு பரிந்துரைத்து உள்ளது.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தபோதும், சீன விமானங்கள் இந்தியாவுக்கு வருவது தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் 10-ல் 7 இந்தியர்கள் (71 சதவீதம்) இன்று வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவின் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிப்பதோடு, கடந்த 14 நாட்களில் சீனாவில் இருந்த யாரையும் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

எனினும், 16 சதவீத இந்தியர்கள், சீனாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் என்றும் சீனாவில் கடந்த 14 நாட்களாக தங்கியுள்ளவர்கள் வேறு நாடுகளின் வழியே இந்தியா வரலாம் என்றும் கூறுகின்றனர்.

அவர்கள் வரும்போது, கொரோனா பாதிப்பில்லா பரிசோதனை அறிக்கையையும் கொண்டு வரவேண்டும் என கூறுகின்றனர். சீனாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு, வேறு நாடுகளின் வழியே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேரடி விமானங்கள் ஹாங்காங்கில் இருந்தே இந்தியாவுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்