பெத்லகேம் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி

பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் ராணுவத்தினர் மீது நெருப்பு வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

Update: 2023-01-04 22:47 GMT

Image Courtesy : AFP

ஜெருசலேம்,

இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் மேற்குகரை பகுதியில் பெத்லகேம் நகர் அமைந்துள்ளது. அங்கு பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் ஏராளமாக உள்ளன. இந்த முகாம்களில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கூறி இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பெத்லகேம் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த பாலஸ்தீன இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

அதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அகதிகள் முகாமில் இருந்த 15 வயது சிறுவனின் உடலில் குண்டு துளைத்தது. அவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தான்.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த வெறிச்செயலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தங்கள் நாட்டின் சிறுவர்களுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய குற்றம் என பாஸ்தீன வெளியுறவு அமைச்கம் சாடியது.

அதே சமயம் பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் ராணுவத்தினர் மீது நெருப்பு வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களை வீசியதாகவும், அதன்பிறகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்