சீனாவில் இருந்து தகவல் தொடர்பு செயற்கைக்கோளை செலுத்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

Update: 2024-05-30 16:31 GMT

பீஜிங்:

பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவின் உதவியுடன், வேகமான இணைய இணைப்புக்காக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இன்று வெற்றிகரமாக செலுத்தியது.

பாக்சாட்-எம்.எம்.1 (PAKSAT MM1) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், சீனாவின் சிச்சுவான் மாகாணம், ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதாகவும், செயற்கைக்கோள் அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாகவும் சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தான் முழுவதும் சிறந்த இணைய வசதிகளை வழங்குவதுடன், தொலைக்காட்சி ஒளிபரப்புகள், செல்போன்கள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்தவும் உதவும். இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் மாதம் முதல் சேவையை வழங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் செலுத்தும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் திட்டமிடல் துறை மந்திரி அஷன் இக்பால் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் விரைவில் தனது சொந்த ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள்களை செலுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

'பாகிஸ்தானின் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நமது சொந்த ராக்கெட்டுகள் மூலம் நமது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்று கூறிய அவர், செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்துவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதற்கு முன்பு சீனாவின் சாங் இ-6 நிலவு திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 3-ம் தேதி ஐக்யூப்-கமார் என்ற மினி செயற்கைக்கோளை பாகிஸ்தான் ஏவியது. இந்த செயற்கைக்கோள் 8-ம் தேதி நிலவின் முதல் படங்களை அனுப்பியது.

Tags:    

மேலும் செய்திகள்