"டீ-க்கு பதிலாக 'லஸ்சி' குடியுங்கள்" - பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம்
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம், தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்கு மக்களை டீ-க்கு பதிலாக உள்ளூர் பானங்களாக ‘லஸ்சி’ மற்றும் ‘சட்டு சர்பத்’ போன்றவற்றை குடிக்கும்படி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.;
அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான நிதி பற்றாக்குறையில் தவித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு திணறி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம், நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்கும் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளது. அதன்படி டீ-க்கு பதிலாக உள்ளூர் பானங்களாக 'லஸ்சி' மற்றும் 'சட்டு சர்பத்' போன்றவற்றை குடிக்கும்படி மக்களை அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களிடம் இதை ஊக்கப்படுத்தும்படி பொதுத்துறை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அந்த ஆணையம் அனுப்பி உள்ளது.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைக்க மக்கள் டீ குடிப்பதை குறைத்த கொள்ள வேண்டுமென திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை மந்திரி அஹ்சன் இக்பால் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.