பாகிஸ்தான்: மத வழிபாட்டு தலங்கள், மாற்று மதத்தினரின் வீடுகளை தீ வைத்து எரித்த கும்பல்

மத புத்தகம் அவமதிக்கப்பட்டதாக மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் மற்றும் வீடுகளை கும்பல் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-08-18 11:01 GMT

லாகூர்,

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, இந்து, கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட மதத்தினர் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மதத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இஸ்லாமிய மத புத்தகமான குரானின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் கிடந்தன. மேலும், அந்த புத்தகத்தில் மத நிந்தனை தொடர்பான கருத்துக்கள் சிவப்பு நிற பேனாவால் எழுதப்பட்டிருந்தன. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

மேலும், இஸ்லாமிய மதப்புத்தகத்தை மாற்று மதத்தை சேர்ந்த இருவர் அவமதித்துவிட்டதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரவின. இஸ்லாமிய மதப்புத்தகம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, இந்த வீடியோவை தொடர்ந்து ஆத்திரமடைந்த இஸ்லாமிய மதத்தினர் கும்பலாக கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தினர். கும்பலாக சென்று கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் மற்றும் சிறுபான்மையினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்து எரித்தனர்.

இந்த தாக்குதல் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஒட்டுமொத்தமாக 5 கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினரின் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த தாக்குதலையடுத்து பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் பஞ்சாப் மாகாணம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்