சிங்கம் வருவது தெரியாமல்...!! திறந்த ஜீப்பில் அமர்ந்திருந்த வனவழிகாட்டி; வைரலான வீடியோ

2.1 கோடி பேர் பார்வையிட்டு உள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு உள்ளது.

Update: 2024-03-14 08:46 GMT

நியூயார்க்,

வனங்களில் வாழ கூடிய உயிரினங்களை நேரிடையாக சென்று பார்வையிட என அதற்கென தனித்த, பயிற்சி பெற்ற திறமையான வழிகாட்டிகள் உள்ளனர். இவர்கள், சுற்றுலாவாசிகளை அழைத்து கொண்டு வாகனங்களில் செல்வார்கள். வனங்களில் பல்வேறு வகையான விலங்குகளின் வாழ்க்கை முறை, இரை தேடுதல், வலம் வருதல் உள்ளிட்ட பிற விசயங்களை பார்வையிடவும், அவற்றை பற்றி அறிந்து கொள்ளவும், பொழுது போக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.

எனினும், இதில் சில ஆபத்துகளும் உள்ளன. வனத்தில் சிங்கம், புலி போன்ற பலசாலியான விலங்குகளும் காணப்படும். இதனால், வாகனங்களில் செல்வோர் அதற்கான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்ல வேண்டியது அவசியம். இல்லையெனில், அவற்றால் தாக்கப்படும் ஆபத்துகளும் உள்ளன. இந்த நிலையில், வனவழிகாட்டி ஒருவர் கையில் கேமிராவுடன் காட்டில், திறந்த நிலையிலான ஜீப் ஒன்றின் முன்னே அமர்ந்தபடி இருக்கிறார்.

வனவிலங்குகளை பார்ப்பதற்காக சென்ற அவர், அடுத்து வரவுள்ள ஆபத்து பற்றி அறியாமல் இருக்கும்போது, சிங்கம் ஒன்று பின்னால் இருந்து அவரை பார்த்தபடி வந்தது. அவர் மெல்ல திரும்பி பார்க்கும்போது, ஏறக்குறைய அவரை நெருங்கி விட்டது. இருவரும் நேருக்கு நேராக பார்க்கும் காட்சியுடன் வீடியோ நிறைவடைகிறது.

2.1 கோடி பேர் பார்வையிட்டு உள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், நீங்கள் என்ன செய்வீர்கள்? என தலைப்பும் காணப்படுகிறது. இதற்கு பலரும் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர். இதுபோன்ற தருணத்தில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தோன்றுமோ? அதனை பகிர்ந்துள்ளனர்.

அதில் ஒருவர், நீ காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என சிங்கம் பார்ப்பதுபோல் உள்ளது என்றும், மற்றொருவர், சிங்கங்களை பார்க்க அவர் போனார். ஆனால், சிங்கம் அவரை பார்த்து விட்டது என்றும் தெரிவித்து உள்ளனர். எனக்கு அப்போதே வாந்தி வந்து விடும் என்று இன்னொருவர் தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்பும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. அதில், சுற்றுலாவாசி ஒருவர் பைனாகுலர் உதவியுடன், ஜீப்பின் முன்னால் அமர்ந்தபடி காடு முழுவதும் அலசி, ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அறியாத வகையில், சிங்கம் ஒன்று அமைதியாக அவரை நெருங்கியது.

இருவரும் சரியாக ஒருவரை ஒருவர் பார்க்கும் தருணம் ஏற்பட்டபோது, பதற்றம் அதிகரித்தது. அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அந்நபரை அலட்சியப்படுத்தி விட்டு, தன்னுடைய பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டு சிங்கம் சென்று விட்டது. இந்த நிலையில், இந்த புதிய வீடியோ வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்து என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்