வட கொரியா அதிபர் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை..!!

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-10-09 22:54 GMT

சியோல்,

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கொரிய எல்லையில் நடந்து வரும் இந்த போர்ப்பயிற்சியை வடகொரியா கடுமையாக எதிர்க்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா கடந்த 2 வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை சோதித்தது. வடகொரியாவின் வடக்கு கடற்கரை நகரமான முன்சோனில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:48 மணிக்கு முதல் ஏவுகணையும், அதன்பின்னர் 1:58 மணிக்கு 2-வது ஏவுகணையும் ஏவப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த 2 ஏவுகணைகளும் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் நீரில் விழுவதற்கு முன்பு 100 மீட்டர் உயரம் வரை சென்று 350 கி.மீ. தொலைவுக்கு பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். ரொனால்டு ரீகனை நிறுத்தியிருப்பது பிராந்திய பாதுகாப்பில் மிகப்பெரிய எதிர்மறையான மாற்றத்தை உண்டாக்கும் என வடகொரியா நேற்று முன்தினம் எச்சரித்த நிலையில், நேற்று இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. 2 வாரங்களில் வடகொரியா நடத்திய 7-வது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வட கொரியாவின் சமீபத்திய ஏழு ஏவுகணைகள் அனைத்தும் "தந்திரோபாய அணுசக்தி" பயிற்சிகள் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன, அவை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்