குறி தவறியது.. நைஜீரியாவில் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் பலி

போராளிகளுக்கு வைத்த இலக்கு குறிதவறிய நிலையில், துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன.

Update: 2023-12-05 09:42 GMT

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராளிக் குழுவினரை குறிவைத்து அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்துகிறது.

இந்நிலையில், கதுனா மாநிலத்தில் போராளிக் குழுவினர் மீது குண்டு வீசுவதற்காக ராணுவம் ஆளில்லா விமானத்தை (டிரோன்) அனுப்பியது. ஆனால் இலக்கு குறிதவறிய நிலையில் துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன. இஸ்லாமிய பண்டிகை கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதால், 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழப்பு குறித்து ராணுவம் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர். 85 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு தேடும் பணி நடைபெறுவதாகவும் தேசிய அவசர மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் இதற்கு முன்பும் இதேபோன்று ராணுவம் வீசிய வெடிகுண்டு, பொதுமக்களை பலி வாங்கியிருக்கிறது. 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லேக் சாட் பகுதியில் நடந்த தாக்குதலில் 20 மீனவர்கள் பலியாகினர். 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ரான் நகரில் மக்கள் தங்கியிருந்த முகாம் மீது தவறுதலாக குண்டு வீசப்பட்டதில் 112 பேர் உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்