ரஷியாவின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷிய படைகளின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவையாக உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-01-30 05:43 GMT


கீவ்,


நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த போரால், வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர். எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற தாக்கங்கள் நீடித்து வருகின்றன.

எனினும், இரு நாடுகளும் சண்டையை கைவிடாமல் உள்ளன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

டோனெட்ஸ்க் பகுதியில் பாக்முத், வூலெடார் மற்றும் பிற பிரிவுகளிலும் நிலைமை மோசமடைந்து உள்ளது. எங்களது படைகளை முறியடிக்கும் தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன.

போரை நீட்டித்து சென்று, எங்களை தோற்கடிக்க ரஷியா விரும்புகிறது. கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை கொண்டு விரைவாக ரஷிய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என நள்ளிரவில் வீடியோ வழியே பேசும்போது கூறியுள்ளார்.

உக்ரைனின் ஆயுத படை தலைவர் நேற்று கூறும்போது, கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் பிளாஹோதாத்னே பகுதியருகே ரஷிய படைகளை விரட்டியடித்தோம் என கூறினார். ஆனால், ரஷியாவின் வாக்னர் என்ற தனியார் ராணுவ அமைப்பு கூறும்போது, கிராமத்தின் கட்டுப்பாட்டை எங்கள் பக்கம் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளது.

ஜெர்மனி மற்றும் அமெரிக்க தலைமையிலான நாடுகள் நவீன ரக பீரங்கிகளை வினியோகிக்க உதவ முன்வந்துள்ள சூழலில், ஜெலன்ஸ்கி ஆயுத தேவைக்கான வேண்டுகோளை முன்வைத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்