இங்கிலாந்து புதிய பிரதமர்: லிஸ் டிரஸ்சுக்கு 90% வெற்றி வாய்ப்பு; சமீபத்திய ஆய்வு தகவல்

இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.

Update: 2022-07-30 08:25 GMT



லண்டன்,



இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததும், இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி அதிர்ச்சி அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஜான்சன், கடந்த 7ந்தேதி பதவி விலகினார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார்.

இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கு 11 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 3 பேர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றனர். இதனால், போட்டி வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக இறுதியானது. இதில், ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த ஓட்டு பெறுவோர் வெளியேற்றப்பட்டு வந்தனர்.

இதன் அடிப்படையில், இறுதி போட்டிக்கான வேட்பாளர் தேர்வில் ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் இடம் பெற்றனர். அக்கட்சியின், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தொண்டர்கள் வாக்களித்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தலை செப்டம்பர் 5ந்தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இரு வேட்பாளர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்திலும் ஈடுபட்டனர். இதில், பொருளாதாரம், வரி உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் அதற்கான திட்டமிடுதல் பற்றியும் பேசப்பட்டது. இவர்கள் இருவரில் ஒருவர் ஆகஸ்டு 4ந்தேதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை நடைபெறும் வாக்கு பதிவில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதுபற்றி யூகவ் என்ற அமைப்பு சார்பில் நடந்த சர்வே ஒன்றில், சுனாக்கை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரஸ் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தகவலின்படி, ரிஷி சுனாக்கிற்கு ஆதரவாக 31 சதவீத உறுப்பினர்களும், டிரஸ்சுக்கு ஆதரவாக 49 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்திடுவார்கள்.

15 சதவீத உறுப்பினர்கள் எப்படி வாக்கு செலுத்துவார்கள் என தெரிய வரவில்லை. இந்த தேர்தலில், 6 சதவீத உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்போம் என தெரிவித்து உள்ளனர். இதனால், இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனாக்கை விட வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் முன்னிலை பெறுவார் என அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.

இந்த சூழலில், இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்பது பற்றி ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், லிஸ் டிரஸ் 89.29 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுருங்கி, 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதனால், பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் ஆய்வின்படி, சுனாக் மிகவும் பின் தங்கியுள்ளார்.

இந்த ஆய்வில், மற்ற வேட்பாளர்களுக்கு 1 சதவீத ஆதரவு கூட இல்லை. இதன்படி, கெய்ர் ஸ்டார்மர் 0.20 சதவீதமும், பென்னி மோர்டான்ட் 0.10 சதவீதமும் மற்றும் ஜெரேமி ஹன்ட் 0.10 சதவீதமும் பெற்று உள்ளனர். இதனால், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு உள்ளது என அந்த ஆய்வு தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்