குரங்கு காய்ச்சல் பரவல் பற்றி புதிய தகவல்கள்
குரங்கு காய்ச்சல் பரவல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெனீவா,
குரங்கு காய்ச்சல், 50 நாடுகளில் பரவி விட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 100 பேருக்கு இக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதை சர்வதேச பெருந்தொற்றாக இப்போது அறிவிக்க தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
அதே சமயத்தில், குரங்கு காய்ச்சல் பற்றி அறியப்படாத விஷயங்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.
குரங்கு காய்ச்சல் பற்றி தெரிந்த 3 விஷயங்களும், தெரிந்து கொள்ள விரும்பும் 3 விஷயங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.
வைரஸ்
தெரிந்த 3 விஷயங்கள்.
1. குரங்கு காய்ச்சல், ஒரு வைரசால் ஏற்படுகிறது.
ஆம். அது, ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த பெரும் மரபணு வைரஸ். சின்னம்மை, பெரியம்மை ஆகியவை மனிதர்களை மட்டுமே தாக்கும். ஆனால், குரங்கு காய்ச்சல் வைரசோ எலிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ள இதர விலங்குகளில் காணப்படுகிறது.
ஆர்த்தோபாக்ஸ் வைரஸ், ஒரு சீரான வைரஸ். அது பெரிய அளவில் உருமாற்றம் அடைவது இல்லை. தற்போது பலமுறை உருமாற்றம் அடைந்ததுதான், இந்த நோய் பரவலுக்கு காரணமாக கருதப்படுகிறது.
2. ஒரு வாரத்துக்கு மேல் குரங்கு காய்ச்சல் நீடிக்கும்.
பொதுவாக அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் ஆகும். நிணநீர் முடிச்சுகள் வீக்கம், காய்ச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஜலம் வழியும் கொப்பளம் போன்று காட்சி அளிக்கும். சுமார் 2 வாரங்கள் தொற்று நீடிக்கும்.
குழந்தைகள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மரணமடைய அதிக அபாயம் உள்ளது. தொற்று பாதித்த ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழந்தவர்களில் ஏறத்தாழ அனைவரும் குழந்தைகள்தான்.
3. குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியும், சிகிச்சையும் உள்ளன.
தடுப்பூசி பலனளிக்கும். சின்னம்மைக்கு போடப்பட்ட தடுப்பூசிகள், குரங்கு காய்ச்சலுக்கு எதிராக 85 சதவீத பாதுகாப்பு அளித்தன.
குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைகளும் உள்ளன. அவை சின்னம்மைக்கு எதிராக உருவாக்கப்பட்ட சிகிச்சைகள் ஆகும்.
தெரிந்து கொள்ள விரும்பும் 3 விஷயங்கள் வருமாறு:-
1. புதிய உருமாற்றங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
தற்போதைய பரவலுக்கு காரணமான வைரஸ், பல்வேறு உருமாற்றங்களை கொண்டுள்ளது. இந்த உருமாற்றங்கள் எப்படி பாதிக்கின்றன, எப்படி பரவுகின்றன என்று தெரியவில்லை.
2. குரங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?
குரங்கு காய்ச்சல் பரவ பாலியல் உறவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதை காரணமாக சொல்ல முடியாது.
இது சுவாசம் மூலம் பரவும் வைரஸ். எனவே, தூசுப்படலம் மூலம் பரவ வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பாலும் விலங்குகளில் இருந்துதான் மனிதர்களுக்கு பரவுகிறது. நெருக்கமான தொடர்பு மூலம் மனிதர்களுக்கிடையே பரவுகிறது.
3. எவ்வளவு தூரம் இது பரவும்?
குரங்கு காய்ச்சல் பரவலாக பரவக்கூடியது. கொரோனா பாதிப்பும், இந்த அபாயத்தை அதிகரிக்கும்.