நெதர்லாந்தில் சட்டவிரோதமாக போலீஸ் நிலையங்களை அமைத்த சீனா

நெதர்லாந்தில் எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் முயற்சியாக சட்டவிரோதமாக போலீஸ் நிலையங்களை சீனா அமைத்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-10-26 22:21 GMT

தி ஹேக்,

சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "நாடுகடந்த குற்றங்களைச் சமாளிப்பதற்கும் சீன லைசென்ஸ்களை புதுப்பித்தல் போன்ற நிர்வாகக் கடமைகளை மேற்கொள்வதற்கும் இந்த காவல் சேவை மையங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவை சீன ஆட்சிக்கு எதிராகப் பேசுவதாக சந்தேகிக்கப்படுபவர்களை நாடு திரும்பும்படி கட்டாயப்படுத்துவதை நோக்கமாக கொண்டவை" என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சீனா தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக 2 காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக நெதர்லாந்து அரசு குற்றம் சாட்டியுள்ளது. தூதரக சேவைகளை வழங்குகிறோம் என்கிற பெயரில் சீன போலீஸ் நிலையங்கள் எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அதிகாரப்பூர்வமற்ற போலீஸ் நிலையங்கள் இருப்பது சட்டவிரோதமானது" என்றார். அதே சமயம் அப்படி போலீஸ் நிலையங்கள் இருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று நெதர்லாந்தில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்