நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் பிரசண்டாவின் அரசுக்கு பின்னடைவு

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

Update: 2024-05-13 11:34 GMT

உபேந்திர யாதவ்

காத்மாண்டு:

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் உட்கட்சி பிரச்சினை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது.

கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக, கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர். பின்னர் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தனர். தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.

இந்த சூழ்நிலையில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பிரசண்டா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறினார்.

யாதவ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் இன்று காலையில் வழங்கினார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

ஜே.எஸ்.பி.-நேபாள் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் இருந்தனர். கட்சி உடைந்தபின் எம்.பி.க்கள் பலம் 5 ஆக குறைந்தது. அசோக் ராய் மற்றும் 6 எம்.பி.க்கள் மற்றும் 30 மத்தியக் குழு உறுப்பினர்கள் புதிய கட்சியில் உள்ளனர்.

உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசண்டா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும், இப்போதைக்கு கூட்டணி ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.

275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்றம்) மெஜாரிட்டிக்கு 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யு.எம்.எல்.)- 77, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்)-32, ராஷ்டிரிய சுதந்திர கட்சி-21, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜனதா சமாஜ்பதி கட்சி-7, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்)-10 ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 147 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்