மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

Update: 2023-10-10 16:18 GMT

Image Courtesy: AFP

ஆட்சி கவிழ்ப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை ராணுவம் கவிழ்ந்தது. பின்னர் அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறி ஆங் சான் சூகி மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக அவருக்கு 33 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் 27 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் போராட்டம்

இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்களும் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக ராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது. அதன்படி வடக்கு மாகாணமான கச்சினில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி குழு செயல்படுகிறது. இவர்கள் பயங்கர ஆயுதங்களை தாங்களே தயாரிக்கும் திறன் கொண்டவர்கள். மேலும் ராணுவத்தை எதிர்த்து போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக ஆதரவு படைகளுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வான்வழி தாக்குதல்

எனவே கச்சினில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். அப்போது இவர்களது தலைமையிடமான லைசாவில் இருந்த அகதிகள் முகாம் ஒன்று தகர்த்தெறியப்பட்டது. இந்த தாக்குதலில் அங்கு தங்கியிருந்த 13 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 60 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த கோர சம்பவத்துக்கு அங்குள்ள மனித உரிமைகள் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்