பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்: அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என அமெரிக்காவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து உள்ளார்.;

Update:2023-04-11 10:39 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவர் ஆடம் போசன் என்பவருடன் உரையாடினார்.

அப்போது, இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாவது பற்றி ஆடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, உலகில் 2-வது பெரிய முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா.

அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மட்டுமே வருகிறது. அவர்களது வாழ்வு கஷ்டத்தில் உள்ளது என்றோ அல்லது அரசின் ஆதரவுடன் அவர்கள் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் என்றோ, பல கட்டுரைகளில் எழுதி வருவது போன்ற விசயங்களில் உண்மை உண்டென்றால் அல்லது அதுபோன்றதொரு பார்வை காணப்பட்டால், 1947-ம் ஆண்டில் இருந்த நிலையை விட, முஸ்லிம் மக்கள் தொகையானது, இந்த சூழலில் இந்தியாவில் வளர்ந்து வருவது நடக்குமா? என கேட்க நான் விரும்புகிறேன்.

2014-ம் ஆண்டு முதல் தற்போது வரையில், முஸ்லிம் மக்கள் தொகை சரிந்து இருக்கிறதா? என பதில் கூறுங்கள். குறிப்பிட்ட சமூகத்தின் மரணங்கள் உயர்ந்து இருக்கிறதா? இதுபோன்ற தகவல்களை எழுதுபவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்படி நான் அழைக்கிறேன். அவர்களுக்கு நான் விருந்தளிக்கிறேன். இந்தியாவுக்கு வந்து அவர்களது விசயங்களை அவர்கள் நிரூபிக்கட்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, இந்த கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மற்றொரு நாட்டின் பெயரை நான் கவனத்தில் எடுக்கிறேன். இஸ்லாமிய நாடு என பாகிஸ்தான் தன்னை அறிவித்து கொண்டது. ஆனால், தனது சிறுபான்மையின மக்களை பாதுகாப்போம் என கூறியது.

எனினும், ஒவ்வொரு சிறுபான்மையினரும் அந்நாட்டில் துன்பத்தில் சிக்கி கொண்டோ அல்லது கடுமையாக பாதிக்கப்பட்டோ வருகின்றனர். சில முஸ்லிம் பிரிவுகள் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் வசிக்கும் முஜாஹிர், ஷியா மற்றும் ஒவ்வொரு பிற குழுவினரையும், நீங்கள் பெயர் கூற முடியும். அவர்கள் பரவலாக உள்ள மக்களால் ஏற்று கொள்ளப்படுவதில்லை. சன்னி பிரிவினரை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், இந்தியாவில் அனைத்து முஸ்லிம் சமூகத்தினரும் தங்களது தொழிலை நன்றாக செய்கின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி தருகின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் தோழமை காட்டி வருகிறது என்றும் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்