ஆராய்ச்சி மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
உயிரி தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-;
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6-ந் தேதி (நேற்று), தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), டைடல் பூங்காவுடன் இணைந்து, டைசல் உயிரி தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. இப்பூங்காவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் உயிரி தொழில் நுட்பத் துறையும் இணைந்து, உயிரி தொழில் நுட்ப முதன்மை கருவியாக்க மையத்தை அமைத்துள்ளன.
முதல்-அமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திற்கிணங்க, இக்கருவியாக்க மையத்தின் வசதிகளை பயன்படுத்தி, உயிரி தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும், அதன்மூலம் உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களில் நம் மாணவர்கள் வேலை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், உயிரி துறையில் புதிய தொழில் முயற்சிகளில் (ஸ்டார்ட் அப்ஸ்) ஈடுபட உதவும் வகையிலும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக சென்னையிலுள்ள கிரசண்ட் இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் கவுன்சில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை இன்குபேசன் மையம், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி மற்றும் வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், அசோசியேசன் பார் பயோ இன்ஸ்பையர்ட் லீடர்ஸ் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப வணிக இன்குபேசன் மையம், சாஸ்தரா டிபிஐ மற்றும் விஐடி டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்களுடன் டைசல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.
மேலும் முதல்-அமைச்சர், காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா நிலை 2-ல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் தொழிற் பூங்காவில், முதல் நில ஒதுக்கீட்டு ஆணையை, ஜென்யுன் பயோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தொழில்நுட்பம்) தனசேகரனிடம் வழங்கினார்.
தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தால் ரூ.35 கோடி செலவில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் 85 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள 3 கருத்தரங்கு கூடங்கள் மற்றும் 2 பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன், தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு உதவும் ஏற்றுமதி வணிக வசதிகள் மையம்;
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் சிப்காட் நிறுவனத்தால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவில், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 400 ஆண் பணியாளர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் 2 தளங்களுடன் 41 ஆயிரத்து 82 சதுர அடி பரப்பளவில் ரூ.10.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் தங்கும் விடுதிக் கட்டிடம்;
சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் 3 ஆயிரம் சதுர அடி கட்டுமானப்பரப்பில் சுற்றுச்சுவருடன் ரூ.1.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம்; இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 3,555 சதுர அடி கட்டுமானப் பரப்பில் சுற்றுச்சுவருடன் தொழில் பூங்காவிற்குள்ளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவைகேற்ப மீட்புப்பணி சேவை மேற்கொள்ள ரூ.1.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், என மொத்தம் 48 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் வந்தனா கார்க், டைசல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி. பூங்குமரன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் டாக்டர் ச.பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.