மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வு

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2023-09-09 07:29 GMT

ரபட்,

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இதனிடையே, இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் இதுவரை 632 பேர் உயிரிழந்துள்ளதாக மொராக்கோ அரசு தெரிவித்தது.  இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 820 ஆக உயர்ந்து உள்ளது.  எனினும், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 700-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர் என புதிய தகவல் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்