டிரம்பின் தீவிர ஆதரவாளரான மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக தேர்வு

டிரம்பின் தீவிர ஆதரவாளரான லூசியானா எம்.பி மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-10-27 00:47 GMT

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். மேலும் தேர்தலை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

அதன்பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழ்சபை) மற்றும் செனட் சபைக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்கிற நிலையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு பிறகு அமெரிக்காவில் அதிகாரம் மிக்க பதவியாக பிரதிநிதிகள் சபை தலைவர் பதவி கருதப்படுகிறது. நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே பிரதிநிதிகள் சபையின் தலைவராக குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனிடையே ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன் கெவின் மெக்கார்த்தி இணக்கமாக இருந்து வந்ததாக சொந்த கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் நம்பிக்கையை இழந்த குடியரசு கட்சியினர் மெக்கார்த்திக்கு எதிராக பொது வாக்கெடுப்பு நடத்தி பதவி பறிப்பை அரங்கேற்றினர்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அவைத்தலைவர் இல்லாமல் அமெரிக்க நாடாளுமன்ற சபை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் நீண்ட இழுபறிக்கு பின்பு சபாநாயகரை தேர்ந்தேடுக்க பொது வாக்கெடுப்பு நடத்த முடிவானது. குடியரசு கட்சி சார்பில் லூசியானா எம்.பி. மைக் ஜான்சன் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து கருப்பின தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் போட்டியிட்டார்.

தேர்தலில் 220 வாக்குகளை பெற்று மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் டிரம்பின் தீவிர விசுவாசி என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் குடியரசு கட்சிக்கு ஆதரவாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்