மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு: வெளிநாடுகளில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்புகிறது
மைக்ரோசாப்ட் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஊடக சேவைகள் பாதிக்கப்பட்டன.
வாஷிங்டன்,
மைக்ரோசாப்ட் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் உலகம் முழுவதும் விமானம், வங்கி மற்றும் ஊடக சேவைகள் பாதிக்கப்பட்டன. கோளாறை சரிசெய்யும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், இணைய பாதுகாப்பு சேவை அளிக்கும் 'கிரவுட்ஸ்ட்ரைக்' நிறுவனமும் ஈடுபட்டன. இதன்பலனாக நேற்று வெளிநாடுகளில் விமான போக்குவரத்து, வர்த்தகம், அரசு சேவைகள் ஆகியவை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கின.
இங்கிலாந்தில் நேற்று விமான சேவைகளில் இழுபறி நீடித்தது. மான்செஸ்டர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு 'போர்டிங் பாஸ்' கையால் எழுதித் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் நிலவியது.
காத்விக் விமான நிலையத்தில், பெரும்பாலான விமானங்கள் திட்டமிட்டபடி புறப்பட்டன. போர்ட் ஆப் டோவர் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. ஜெர்மனியில், பெரும்பாலான விமானங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின. அமெரிக்காவிலும் இயல்புநிலை திரும்பி வருகிறது.