கணவன், குழந்தைகளை கைவிட்டு பாக். சென்ற ராஜஸ்தான் பெண் மதம் மாறி காதலனுடன் திருமணம்...!

கணவன், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண் அஞ்சு மதம் மாறி பாத்திமா என்ற பெயரில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார்.

Update: 2023-07-25 13:28 GMT

லாகூர்,

உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அஞ்சு தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிஹ்வாடி பகுதியில் வசித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் அஞ்சுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற நபருடன் 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, தனது கணவர், குழந்தைகளை கைவிட்ட அஞ்சு தனது காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார்.

முறையாக விசா பெற்று கடந்த 20-ம் தேதி அஞ்சு பாகிஸ்தான் சென்றார். அங்கு அவர் தனது காதலன் நஸ்ருல்லாவை சந்தித்துள்ளார். தற்போது அஞ்சு பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் அப்பர் டிர் மாவட்டம் குல்ஷொ கிராமத்தில் உள்ள தனது காதலன் நஸ்ருல்லாவின் வீட்டில் வசித்து வருகிறார். தான் சுற்றுலா தலங்களை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும், நஸ்ருல்லாவை திருமணம் செய்ய செல்லவில்லை என்றும் ஒரிரு நாட்களில் இந்தியா திரும்பிவிடுவேன் என்றும் அஞ்சு நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்து மதப்பெண்ணான அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலனான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என மாற்றிக்கொண்டு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார். அஞ்சு பாத்திமா என்ற பெயரில் மதம்மாறிய பின் அப்பர் டிர் மாவட்டம் கோர்ட்டில் நஸ்ருல்லா குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நஸ்ருல்லா - அஞ்சு (பாத்திமா) திருமணம் நடைபெற்றது. இந்திய பெண் அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டதாகவும், நஸ்ருல்லா பாத்திமாவை திருமணம் செய்துகொண்டதாகவும் அப்பகுதி போலீஸ் அதிகாரி நசீர் முகமது தெரிவித்தார்.

இருவரும் தங்கள் முழு விருப்பத்தின் பெயரிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர். அதேபோல், பாத்திமா என்ற பெயருடன் மதம் மாறிய அஞ்சு தான் விருப்பப்பட்டே பாகிஸ்தான் வந்ததாகவும், இங்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார். நஸ்ருல்லா - பாத்திமாவின் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோர்ட்டில் நடைபெற்ற நிலையில் பின்னர் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற மஞ்சு மதமாறி பாத்திமா என்ற பெயரில் காதலன் நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் பாகிஸ்தானில் வசிக்க மஞ்சுவுக்கு வழங்கப்பட்ட விசா அடுத்த மாதம் 20ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. விசா காலாவதியாகும் பட்சத்தில் அவர் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார் அல்லது அவரின் விசா காலத்தை நீட்டித்து நிரந்தரமான பாகிஸ்தானில் வாழ அந்நாட்டு அரசு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  



மேலும் படிக்க.., திருமணம் செய்ய சென்றீர்களா? - கணவனை கைவிட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண் பதில்

Tags:    

மேலும் செய்திகள்