மலேசியாவில் சுற்றுலா தலத்தில் பயங்கர நிலச்சரிவு - 21 பேர் பலி

மலேசியாவில் சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 21 பேர் பலியாகினர்.

Update: 2022-12-16 19:20 GMT

கோலாலம்பூர்,

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது படாங் காளி என்கிற நகரம். இங்கு பல ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய இயற்கை விவசாய பண்ணை உள்ளது.

இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கான பிரபலமான பொழுதுபோக்கு தளமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்களை அமைத்து பொழுதை கழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த பண்ணையில் சுமார் 100 சுற்றுலா பயணிகள் குடில்களை அமைத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீட்டர் உயரத்தில் இருந்து மண் சரிந்து விழுந்ததில், சுமார் 1 ஏக்கர் நிலம் மண்ணால் மூடப்பட்டது.

இந்த நிலச்சரிவில் அங்கிருந்த சுற்றுலா பயணிகளின் குடில்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் குடில்களில் இருந்த டஜன் கணக்கானோர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என சுமார் 400 பேர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் பலனாக 53 பேர் காயங்கள் எதுவும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளில் 5 வயது பச்சிளம் குழந்தை உள்பட 21 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த நிலச்சரிவில் 12 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் பலி இன்னும் அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்