தலீபான்களால் சுடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு: பாகிஸ்தான் சென்ற மலாலா- எதற்கு தெரியுமா?

மலாலா 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான்கள் சுட்டனர்.

Update: 2022-10-11 16:42 GMT

கராச்சி,

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய், தலீபன்களால் தான் சுடப்பட்டு சமீபத்தில் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிறகு, தனது தாயகமான பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசப்சாய். இவர் 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான்கள் சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், லண்டனில் உயர் சிகிச்சைக்காக சென்ற மலாலா உயர் தப்பினார்.

தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறிய மலாலா, அதன் 10வது ஆண்டு நிறைவுக்குப் பிறகு, பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் பாகிஸ்தானில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லவுள்ளார். தலீபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மலாலா பாகிஸ்தான் வருவது இது இரண்டாவது முறை.

"பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தாக்கத்தில் சர்வதேச கவனத்தை ஒருமுகப்படுத்தவும், முக்கியமான மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலுப்படுத்தவும் உதவுவதே அவரது வருகையின் நோக்கம்" என அவரது மலாலா நிதியம் அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்