தலீபான் கொலை முயற்சியில் உயிர் தப்பி 10 ஆண்டுகள் நிறைவு; மலாலா பாகிஸ்தான் வருகை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு நீண்ட காலத்துக்குப் பின் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

Update: 2022-10-11 16:33 GMT

பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா, தனது சிறுவயது முதலே பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி மலாலா 15 வயது சிறுமியாக இருந்தபோது தலீபான் பயங்கரவாதிகள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேல்சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர், அங்கேயே உயர்க்கல்வி படித்து பட்டம் பெற்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். இந்த நிலையில் மலாலா தலீபான்களின் கொலை முயற்சியில் உயிர் தப்பி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் அவர் பாகிஸ்தான் வந்தார்.

லண்டனில் இருந்து விமானம் மூலம் கராச்சி நகருக்கு வந்த மலாலா, அங்கிருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தாக்கத்தில் சர்வதேச கவனத்தை ஒருமுகப்படுத்தவும், முக்கியமான மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலுப்படுத்தவும் உதவுவதே மலாலா வருகையின் நோக்கம் என அவரது அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. தலீபான்களின் கொலை முயற்சிக்கு பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் வந்த மலாலா, 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது தாயகத்துக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்