உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம்: ஜி-7 நாடுகள் அறிவிப்பு

உக்ரைனுக்கு எதிரான போரை தொடங்கிய ரஷியாவே, போரை முடிவுக்கு கொண்டு வரவும் முடியும் என ஜி-7 நாடுகளின் கூட்டறிக்கை தெரிவித்து உள்ளது.

Update: 2023-05-20 10:31 GMT

ஹிரோஷிமா,

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், போரை கைவிடாமல் ரஷியா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜி-7 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்கி நடந்தது.

இதுபற்றி உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளன. அதில், ரஷியாவின் சட்டவிரோத போரை முன்னிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்காக, 7 நாடுகளின் குழு தலைவர்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அதுபற்றிய கூட்டறிக்கை தெரிவிக்கின்றது.

அந்த அறிக்கையில், 15 மாத கால ரஷியாவின் படையெடுப்பினால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனிய மக்களுக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. உலகில் அதிக பாதுகாப்பற்ற மக்களுக்கு வேண்டிய உணவு மற்றும் எரிசக்தி உள்ளிட்டவை கிடைக்க பெறாத சூழல் உள்ளது.

அதனால், ரஷியா போரை நிறுத்த வேண்டும் என உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன. உடனடியாக, முழுவதும் மற்றும் நிபந்தனையற்ற முறையில் படைகள் மற்றும் ராணுவ சாதனங்களை உக்ரைனின் சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, போருக்கு எதிராக படைகளை குறைக்க செய்வது மற்றும் அணு ஆயுதங்களற்ற உலகம், அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு கிடைக்க பெறுவது ஆகிய இலக்குகளை வலுப்பெற செய்வோம் என அவர்கள் உறுதி எடுத்தனர்.

உக்ரைனுக்கு எதிரான நியாயம் அல்லாத, சட்டவிரோத மற்றும் எந்தவித காரணமும் இன்றி போரை தொடுத்துள்ள ரஷியாவின் போருக்கு எதிராக நாம் ஒன்றாக நிற்போம் என ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.

இதுபற்றிய கூட்டறிக்கையில், ஜப்பானின் ஜி-7 தலைமையின் கீழ், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் உக்ரைனுக்கு தேவையான நிதி உதவியை வழங்குவதில் நாங்கள் உறுதி கூறுகிறோம் என தெரிவிக்கின்றது.

போரை ரஷியாவே தொடங்கியது. அதனால், அந்த நாடே போரை முடிவுக்கு கொண்டு வரவும் முடியும் என அந்த கூட்டறிக்கை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்