ரிஷி சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகளை வழங்கிய அரசர் மூன்றாம் சார்லஸ்

இங்கிலாந்து பிரதமராக அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு அரசர் மூன்றாம் சார்லஸ் நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகளை வழங்கினார்.

Update: 2022-10-26 01:19 GMT



லண்டன்,


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.

அரசர் மூன்றாம் சார்லஸ் முறைப்படி புதிய கன்சர்வேடிவ் தலைவராக ரிஷி சுனக்கை நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி ரிஷி சுனக்கின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதுபற்றி தி ராயல் பேமிலி சேனல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகிய இருவரும் அரண்மனையின் 1844-ம் எண்ணிடப்பட்ட அறையில் சந்தித்து கொண்டனர். அந்த அறையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இனிப்புகள் சாப்பிடப்பட்டன என தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்தின் புதிய பிரதமர் 42 வயதேயான ரிஷி சுனக்கிற்கு, பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்தின் 57-வது பிரதமரான ரிஷி சுனக், யார்க்ஷயர் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றபோது பகவத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார். அவ்வாறு செய்த முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான். தன்னை இந்து என கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என சுனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை நேற்று சந்தித்து பேசினார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் முதல் இந்து பிரதமர் என்ற பெருமையை சுனக் பெற்றதுடன், தீபாவளி பண்டிகையையொட்டி அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தீபாவளி அன்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணம் என இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ந்து உள்ளனர்.

ரிஷி சுனக், கடந்த 2020-ம் ஆண்டு நிதி மந்திரியாக பதவி வகித்தபோது, 11 டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே தீபாவளி அன்று மெழுகுவர்த்திகளை ஏற்றினார். அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையில், அவர் அந்நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்று உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்