முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகர் ஜானி டெப் வெற்றி...!
முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,
பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் லோரி அனி அலிசன் என்ற பெண் ஒப்பனை கலைஞரை 1983-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 1985-ம் ஆண்டு இந்த தம்பதி பிரிந்து விவகாரத்து பெற்றனர்.
இதனை தொடர்ந்து ஜானி டெப் திருமணம் செய்துகொள்ளாமல் பல நடிகைகளுடன் திருமணம் அற்ற உறவில் நீடித்து வந்தார்.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹேர்ட்டை நடிகர் ஜானி டெப் திருமணம் செய்துகொண்டார். ஜானி தன்னை விட 25 வயது குறைவாக இருந்த ஆம்பர்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண உறவு 2 ஆண்டுகளே நீடித்தது.
பின்னர், 2017-ம் ஆண்டு ஜானி டெப் - ஆம்பர் திருமண பந்தம் முறிந்தது. இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர்.
அதேவேளை, 2019-ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்'-ல் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், தனது முன்னாள் கணவரான டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அந்த கட்டுரையில் ஆம்பர் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் உலக அளவில் பேசுபொருளானது. மேலும், இந்த கட்டுரை வெளியான பின்னர் ஜானி டெப்பிற்கு படவாய்ப்புகள் குறைந்தன. பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் பட தொடரில் இருந்தும் டெப் நீக்கப்பட்டார்.
ஆனால், குடும்ப வன்முறை என தனது ஆம்பர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி டெப், தனது முன்னாள் மனைவி ஆம்பர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். மேலும், குடும்ப வன்முறைக்கு இலக்கானது தான் தான் என ஜானி டெப் தெரிவித்தார். தனது பெயர், புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் செயல்படுவதாக இதற்கு இழப்பீடாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக்கோரி ஆம்பர் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். அதேவேளை, தனது முன்னாள் கணவரான ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறைக்கு உள்ளானதாகவும் வழக்கு தொடர்ந்த ஆம்பர் தனக்கு நஷ்ட ஈடாக 776 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் வெர்ஜீனியா கோர்ட்டில் 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த இறுதிகட்ட விசாரணை உலக அளவில் பேசுபொருளானது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பே வெளியானது.
அதன்படி, ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானதாக கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. ஜானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும், அவதூறு பரப்பும் நோக்கத்தோடு பொய்யாக 2018-ம் ஆண்டு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் கட்டுரை எழுதியுள்ளார் என கோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை என கோர்ட்டு தெரிவித்தது.
இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
ஆனால், கோர்ட்டு அபராதம் விதிக்கும் உச்சபட்ச தொகை அளவு 2.71 கோடி ரூயாய் (35 ஆயிரம் டாலர்)என்பதால் அபராத தொகையான 5 மில்லியனுக்கு பதில் 35 ஆயிரம் டாலரை செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு 80.31 கோடி ரூபாய் (10.35 மில்லியன் டாலர்) இழப்பீடாக கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜானி டெப்பிற்கு எதிராக ஆம்பர் தொடர்ந்த 3 வழக்குகளில் 1 வழக்கில் ஆம்பருக்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜானி டெப்பின் வழக்கறிஞர்களில் ஓருவர், 'ஆம்பர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையற்றவை மற்றும் பிறரை நம்பச்செய்வதற்காக ஏமாற்றும் வேலையில் ஈடுபடும் செயல்' என செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அந்த வழக்கறிஞரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஆம்பருக்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஆம்பருக்கு 15 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஜானி தொடர்ந்த வழக்கில் மான நஷ்ட ஈடு வழக்குகளில் அவருக்கு ஆதரவான தீர்ப்புகளே வெளியாகியுள்ளது. இது ஜானிக்கு கிடைத்த வெற்றியாக கருத்தப்படுகிறது.
ஜானிக்கு ஆதரவான தீர்ப்புகள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஜானி டெப் ஆதரவாளர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருவதால் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.