லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள்... சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்து ஓட்டம்

இஸ்ரேல் போர் விமானங்களின் சத்தம் கேட்டதும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் பேச்சை கேட்க கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2024-08-06 16:44 GMT

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இதன் தொடர்ச்சியாக, ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் இன்று விண்ணை கிழித்து கொண்டு சென்றன. இதனால் எழுந்த சத்தம் அதிக அளவில் இருந்துள்ளது. ஒன்றல்ல... 3 முறை இதுபோன்ற சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் பேச்சை கேட்பதற்காக கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சிலர் கூறும்போது, எங்களால் அந்த விமானங்களை நேரடியாக பார்க்க முடிந்தது என கூறினர்.

பெய்ரூட்டில் பல ஆண்டுகளில், இதுவரை இல்லாத வகையில் அதிக சத்தம் இப்போது கேட்டது என அவர்கள் கூறினர். இதேபோன்று, பெய்ரூட்டின் பதரோ மாவட்டத்தில் உணவு விடுதி ஒன்றில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதனால், அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்