இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - ஹமாஸ் தகவல்
பாலஸ்தீனத்தின் மையப் பகுதியில் உள்ள அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்ததாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காசா,
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி போரை தொடங்கியது. ஆரம்பத்தில் காசாவை வான்வழியாக மட்டும் தாக்கி வந்த இஸ்ரேல் ராணுவம் பின்னர் தரைவழியாக காசாவுக்குள் ஊடுருவி தாக்குதலை விரிவுப்படுத்தியது.
அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக தெற்கு காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய காசா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த வான்வழித் தாக்குதலின் மூலம் பாலஸ்தீனப் பகுதியின் மையத்தில் உள்ள அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை அழித்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதே சமயம் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய காசாவில் தரைவழியாக முன்னேறி வந்த இஸ்ரேல் படை வீரர்களை குறி வைத்து ஹமாஸ் அமைப்பினர் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர். இதில் இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் மூலம் காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கியதில் இருந்து உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.