ஹிஜ்புல்லா மூத்த தலைவரை குறி வைத்து லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹிஜ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை குறி வைத்து லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

Update: 2024-09-26 14:05 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி ஹிஜ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனால், காசா மற்றும் லெபனானை இலக்காக கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில், நேற்று வரை லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 50 பேர் குழந்தைகள் ஆவர். 1,835 பேர் காயமடைந்து உள்ளனர் என லெபனான் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லெபனானின் ஹிஜ்புல்லா குழுவின் அல்-மனார் என்ற தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட தகவலில், ஹிஜ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை குறி வைத்து லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது என தெரிவித்தது.

லெபனானில் பல்வேறு ஆயுத குழுக்களின் இடங்கள் அமைந்த தெற்கு புறநகர் பகுதியருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எனினும், இந்த தாக்குதலில் அவருக்கு என்ன ஆனது? என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. 2 நாட்களுக்கு முன் இதேபோன்றதொரு தாக்குதலில் ஹிஜ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்