ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் படுகொலைக்கு விரைவில் பதிலடி - ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-01-06 23:47 GMT

Image Courtacy: AFP

பெய்ரூட்,

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து நடைபெற்று வரும் போரில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினா் ஹமாசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். இதனால் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்குவர். இந்த சூழலில் கடந்த 2-ந்தேதி இரவு லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவா் சலே அல்-அரூரியும், அவரது 6 பாதுகாவலா்களும் உயிரிழந்தனா். மேலும் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்த தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பும், லெபனானும் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா 'ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் படுகொலைக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும்' என இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் மீது 60-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிஸ்புல்லா அமைப்பினரின் இந்த தாக்குதலால் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்