இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

Update: 2023-10-12 19:46 GMT
Live Updates - Page 2
2023-10-13 06:32 GMT

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜோர்டான் பயணம்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஜோர்டான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசை பிளிங்கன் சந்திக்க உள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 7வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் பிளிங்கனின் ஜோர்டான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

2023-10-13 05:28 GMT

இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் - ஹமாஸ்

காசா முனை மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

2023-10-13 05:27 GMT

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹமாஸ் எங்கள் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை - வடகொரியா

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹமாஸ் எங்கள் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் தங்களை தொடர்புபடுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

2023-10-13 04:18 GMT

24 மணி நேரத்தில் வெளியேறுங்கள் - வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள மக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் 11 லட்சம் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு செல்வது சாத்தியமற்றது. மேலும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.  

2023-10-13 02:14 GMT

பலி எண்ணிக்கை 2,800-ஐ கடந்தது...!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடந்து வருகிறது. கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசா முனையில் இதுவரை 1,537 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.

2023-10-13 01:38 GMT

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்பு - விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்...!

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.

இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது.

அந்த விமானம் மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.

போரால் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. 

2023-10-12 23:34 GMT

இஸ்ரேலில் இருந்து நேபாளம் தனது 253 மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தது

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து நேபாளம் தனது 253 மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தது. விமானத்தில் பயணித்த மாணவர்களை வெளியுறவு அமைச்சர் என்பி சவுத் வரவேற்றார்.

2023-10-12 22:06 GMT

இஸ்ரேலுடன் “இன்று, நாளை மற்றும் ஒவ்வொரு நாளும்” அமெரிக்கா துணை நிற்கும் - ஆண்டனி பிளிங்கன்


ஹமாசின் கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் எதிர்கொள்ளும் பயங்கரமான சூழ்நிலையைப் பற்றிய தனது புரிதலை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி வெளிப்படுத்தினார்,

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இன்று, நாளை, ஒவ்வொரு நாளும் அமெரிக்கா இஸ்ரேலுடன் நிற்கிறது... இது நம்மில் எவருக்கும் சாத்தியமற்றது என்று நான் நினைக்கிறேன். கடந்த சில நாட்களாக ஹமாசின் கைகளில் இஸ்ரேல் அனுபவித்ததை மனித அளவில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் மக்களைப் பாதுகாக்கவும், எங்களுடன் இணைந்திருக்கும் மதிப்புகளைப் பாதுகாக்கவும் நாங்கள் உங்களுடன் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம். நாம் பார்த்ததை, நம் மனதில் இருந்து மற்றும் நிச்சயமாக நம் இதயங்களில் இருந்து அழிக்க மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இஸ்ரேல் வெற்றி பெற வேண்டும், நீங்கள் செய்வதை உறுதிப்படுத்த உதவுவதற்கு அமெரிக்கா உங்கள் பங்காளியாக இங்கே உள்ளது” என்று பிளிங்கன் கூறினார்.

2023-10-12 21:03 GMT

காசா அடுக்குமாடி குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

வடக்கு காசாவில் உள்ள மக்கள்தொகை மிகுந்த ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று காசாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆறு நாட்களில் 6,000 குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அறிவிக்கப்படாத தாக்குதலில் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் அல்லது மனிதாபிமான உதவி எதுவும் இல்லை என்று இஸ்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 500 குழந்தைகள் மற்றும் 276 பெண்கள் உட்பட 1,537 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 6,612 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300ஐ எட்டியுள்ளது.

2023-10-12 20:48 GMT

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 212 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்

போர்க்களமாக மாறியிருக்கும் இஸ்ரேலில் இந்தியர்களும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். போரின் உக்கிரத்தால் அவர்களில் பலரும் நாடு திரும்ப துடித்து வருகின்றனர். எனவே இவர்களை மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது.

ஏற்கனவே ரஷியா தாக்குதலில் சிக்கிய உக்ரைனில் இருந்தும், உள்நாட்டுப்போரில் சிக்கிய தெற்கு சூடானில் இருந்தும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு இருந்தது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் இஸ்ரேலில் இருந்தும் இந்தியர்களை மீட்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது. இதற்காக ‘ஆபரேசன் அஜய்’ என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது.

இந்த சூழலில் ஆபரேஷன் அஜய்யின் கீழ் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏஐ 1140 என்ற விமானம் நேற்று இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 212 இந்தியர்களுடன் விமானம் நேற்றிரவு இந்தியாவுக்கு புறப்பட்டது.

212 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்திய குடிமக்களை அழைத்து வருவதற்காக முதல் விமானம் இரவு டெல் அவிவ் சென்றடையும், மேலும் நாளை (இன்று) காலை இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்