பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?

ரபா நகருக்குள் நுழைந்து தாக்கப்போவதாக சபதம் செய்து வரும் இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

Update: 2024-05-07 06:07 GMT

ரபா:

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பான எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக கெய்ரோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்துள்ள இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, காசாவில் தனது கடைசி இலக்கான ரபா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் படைகள், அவ்வப்போது ரபா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு ரபா மீது மீண்டும் வான்தாக்குதல் நடத்தப்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அங்குள்ள குவைட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரபாவில் தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் படைகள் தயார் நிலையில் உள்ளன. ரபா நகருக்குள் நுழைவதாக பல வாரங்களாக சபதம் செய்து வரும் இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. கிழக்கு ரபாவில் உள்ள பாலஸ்தீனியர்களை விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதிக்கு செல்லுமாறு நேற்று அழைப்பு விடுத்தது.

இதற்கிடையே, நேற்று இரவு காசாவிலிருந்து தெற்கு இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசி தாக்கியதாக ஹமாஸ் அமைப்பின் கூட்டாளியான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுப்பதால் இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருதரப்புக்கும் அமைதி ஒப்பந்தம் ஏற்படாத பட்சத்தில், ரபா நகருக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பொதுமக்கள் மேலும் துன்பங்களை அனுபவிப்பார்கள் என்றும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்