ஈரானில் நடப்பாண்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
ஈரான் அரசாங்கம் நடப்பாண்டில் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளது.;
தெஹ்ரான்,
ஈரான் அரசாங்கம் நடப்பாண்டில்(2022இல்) 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினியை அறநெறி போலீசார் கடுமையாக தாக்கினர்.
ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஈரானில் இதுவரை குறைந்தது 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரான் அரசாங்கம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.
இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக 2021இல், குறைந்தது 333 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த நிலையில், நியாயமான விசாரணை இல்லாமல் இந்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித உரிமைகள் குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார்.
மரணதண்டனைகள் மூலம் சமூகத்தில் அச்சத்தை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்திலும், அரசின் உளவுத்துறை தோல்விகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்திலும் இந்த மரணதண்டனைகள் இருந்தன என்று மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார்.