ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணம் அடைந்தது வரலாற்றுத் திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

Update: 2024-09-29 06:10 GMT

பெய்ரூட்:

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா ( வயது 64) கொல்லப்பட்டார்.

1982-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பில் இணைந்த ஹசன் நஸ்ரல்லா, 1992-ம் ஆண்டு அந்த அமைப்பின் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 32 வருடங்களாக அப்பதவியில் நீடித்து வந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு 5 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அறிவித்தார். மேலும், நஸ்ரல்லாவின் மரணம் பழிவாங்காமல் போகாது என்றும் எச்சரித்துள்ளார்.

அதேசமயம், நஸ்ரல்லாவின் மரணம் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும், போரில் திருப்புமுனையாகவும் இஸ்ரேல் கருதுகிறது.

இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் மத்திய தலைமையகமாக கருதப்படும் இடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணம் அடைந்தது வரலாற்றுத் திருப்புமுனை என்றும், நஸ்ரல்லாவைக் கொன்றதன் மூலம், அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது பக்கம் திரும்பியிருப்பதாகவும், இதன் காரணமாக ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார். உயிருக்கு பயந்து பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை பாதுகாப்பாக இருக்கும்படி நெதர்லாந்து நாட்டின் எம்.பி. கீர்த் வைல்டர்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பதற்றம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பான பதுங்கு குழியில் இருப்பது நல்லது என்று அவர் கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பாக காமேனியின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்த வைல்டர்ஸ் இவ்வாறு கூறியிருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்