பதற்றங்களுக்கு மத்தியில் செயற்கைக்கோளை செலுத்தியது ஈரான்

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் தொடர்பாக ஐ.நா. விதித்த தடைகள் கடந்த அக்டோபர் மாதம் காலாவதியாகின.

Update: 2024-01-20 12:12 GMT

ஜெருசலேம்:

மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அரசு தனது விண்வெளி திட்டத்தில் புதிய செயற்கைக் கோளை செலுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

குயேம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சோரயா செயற்கைக்கோள், பூமியில் இருந்து 750 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. எனினும், செயற்கைக்கோளின் பணி என்ன என்பதை வெளியிடவில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுதவிர ஈரான் மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது ஈரானும் வான் தாக்குதல் நடத்தின. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் தனது செயற்கைக் கோள் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஈரான் இதற்கு முன்பு செயற்கைக்கோள்களை செலுத்தியபோது, அது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் சம்பந்தப்பட்ட எந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் தொடர்பாக, ஐ.நா. விதித்த தடைகள் கடந்த அக்டோபர் மாதம் காலாவதியாகின. அதன்பின்னர் ஈரான் தனது செயற்கைக் கோள் பணியை தொடங்கியிருக்கிறது.

2023-ம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட கணிப்பில், ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் வாகனங்களின் உருவாக்கம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை ஒத்திருப்பதாக கூறியிருந்தது.

அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படலாம். உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் முறிந்த பிறகு, ஈரான் இப்போது யுரேனியத்தை ஆயுதங்களில் பயன்படுத்தும் தரத்தில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த விஷயத்தில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ஈரானை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்து வருகிறது. மேலும், ஈரானின் அணுசக்தி செயல்பாடுகளை போலவே, விண்வெளித் திட்டமும் முற்றிலும் பொதுமக்களின் நலனுக்காகவே உள்ளது என்று கூறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்