அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சி அறிமுகம்; சவுதி அரேபிய அரசு முடிவு

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-09-29 06:29 GMT



ரியாத்,


சவுதி அரேபியாவில் அனைத்து சமூக பிரிவினரின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக யோகாவை ஆக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அதன் பயிற்சி முறைகளை ஊக்குவிக்கவும் முடிவானது.

இதற்காக அனைத்து பல்கலை கழகங்களிலும் உள்ள பிரதிநிதிகளுக்கும் யோகா பற்றிய அறிமுக சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதன்படி பாரம்பரிய யோகா மற்றும் யோகாசன விளையாட்டு ஆகியவற்றை சவுதியில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் அறிமுகப்படுத்தும் நோக்கம் செயல்பாட்டுக்கு வரும். பல்கலை கழகங்களின் வளாகத்தில் யோகாவை பயிற்சி மேற்கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த சொற்பொழிவானது, மனம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. தவிர உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தொழில்முறை யோகாசன விளையாட்டு பயிற்சிகளில் மாணவர்களை இணைய செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக ரியாத் நகரில் சவுதி பல்கலை கழகங்களின் விளையாட்டு கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு, சவுதி யோகா கமிட்டி இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதன்படி, இரு பாலின மாணவர்களும் பயிற்சிகளை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்